மதுரை: கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் திருவண்ணாமலையைச் சேர்ந்த அர்ச்சகர் அரங்கநாதன் ஆகியோர் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், "கரூர் மாவட்டம் நேரூர் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் சபா தரப்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும், அவர்கள் உண்ட இலையில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மே 18ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வில், அவ்வாறு அங்கப்பிரதட்சணமும் செய்யப்பட்டது. ஆனால், கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இதுபோல பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யும் நிகழ்வுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. அதன் அடிப்படையில் இந்த ஆண்டும் அனுமதி மறுக்கப்பட்டது.
ஆனால், மனுதாரர் நீதிமன்றத்தை நாடி பழைய உத்தரவுகளை மறைத்து, தங்களுக்கு சாதகமான உத்தரவை பெற்று விட்டனர். இந்த உத்தரவு பலராலும் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே, பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யலாம் என்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் மனுதாரர் தரப்பில் ஆஜராகி, மனிதர்கள் இது போன்ற இழிவான செயல்களில் ஈடுபடக்கூடாது என்று உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த நிகழ்வுக்கு தடை விதித்து உள்ளது. அவ்வாறு இருக்கையில் தனி நீதிபதி எவ்வாறு தடையை நீக்க முடியும்? இதில் சாதிய பாகுபாடு உள்ளது. மனித கண்ணியத்தை குறைக்கிறது. எனவே தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.
மேலும், இந்த வழக்கில் அரசு தரப்பு வாதங்களையும், எதிர் தரப்பு வாதங்களையும் கேட்க உள்ளதால் வழக்கின் விசாரணை நாளை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: கூடங்குளம் அணுமின் நிலைய பகுதியில் சுற்றி திரிந்த ரஷ்யர்கள்; காவல் ஆய்வாளர் பிறப்பித்த அதிரடி உத்தரவு! - RUSSIANS ENTERS NUCLEAR POWER PLANT