மதுரை: மதுரையை தலைமையாகக் கொண்டு நியோமேக்ஸ் பிராபர்ட்டீஸ் (பி) லிமிடெட் என்ற நிறுவனம் பல மாவட்டத்தில் அலுவலகங்கள் அமைத்து செயல்பட்டன. தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதிக வட்டி தருவதாகவும், இரட்டிப்பாக தரப்படும் என ஆசை வார்த்தை கூறி முதலீடுகளை வசூலித்துள்ளனர்.
இதை நம்பி 6 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடுகளை செய்துள்ளனர். ஆனால், கூறியபடி யாருக்கும் வட்டி தராமல் ஏமாற்றியதால், முதலீடு செய்தவர்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு அளித்தனர். இதனடிப்படையில் முக்கிய இயக்குனரான கமலக்கண்ணன், வீரசக்தி, பாலகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளனர்.
இந்த மனு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு எந்த வேலையும் செய்ததாக தெரியவில்லை. இத்தனை மாதங்களாகியும் நியோமேக்ஸ் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.
பொருளாதார குற்றப்பிரிவு போலிஸ் நடவடிக்கைகளில் திருப்தி இல்லை. இப்படியே சென்றால் நியோமேக்ஸ் வழக்கை விசாரிக்க தனிவிசாரணை அமைப்பை உருவாக்க நேரிடும். ஒவ்வொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள, அனுமதி வழங்க 15 முதல் 30 நாட்களுக்குள் பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி, உள்துறை செயலாளர் அனுமதி வழங்க வேண்டும்.
நிதிநிறுவன மோசடி வழக்குகளை கையாள ஒற்றை சாரள முறையை ஏற்படுத்த வேண்டும். பல துறைகளை வைத்துக்கொண்டு விசாரிப்பது, அதற்கு அனுமதி பெறுவது என நிதி நிறுவன மோசடி வழக்குகள் நீர்த்துப்போவதை தடுக்க, புதிய வழிமுறைகளை, வழிகாட்டுதல்களை ஏற்படுத்தினால் விசாரணை வேகமாக நடைபெறும்.
இந்த வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றம் வழக்கறிஞர் ஆணையம் நியமனம் செய்துள்ளது. இவ்வாறு செய்வதற்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை எனவே வழக்கறிஞர் ஆணையத்தை செயல்படுத்த முடியாது.
எனவே இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு பணத்தை திருப்பி வழங்குவது குறித்து உள்துறை செயலாளர் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி ஆகியோர் இணைந்து நிறுவனத்திடம் கைப்பற்றிய சொத்துக்களை முறைப்படுத்தி, சொத்துக்களை ஆவணப்படுத்துவது, முதலீட்டாளர்களுக்கு வழங்குவது, நீதிமன்ற வழக்குகளை கையாள்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள எத்தனை நாட்கள் தேவைப்படும் என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க: நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க ஓபிஎஸ் முடிவு? - வெளியில் இருந்து ஆதரவா? - OPS Seat Sharing