மதுரை: விபத்து ஏற்படுத்தியதற்காக ஓட்டுநர் உரிமத்தை 6 மாதம் ரத்து செய்த ஆணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் துறையினரின் இறுதி விசாரணையை முடிவடையாத நிலையில், ஓட்டுநரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்து வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவு பிறப்பிக்க முடியாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
சங்கரன்கோவிலைச் சேர்ந்த ஓட்டுநர் நாகராஜன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், "சங்கரன்கோவிலில் இருந்து மதுரைக்கு தனது காரை ஓட்டிக் கொண்டு வந்த போது, எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில் கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான நபர் படுகாயமடைந்த நிலையில் அவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, குருவிக்குளம் காவல் நிலையத்தில் தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், சங்கரன்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலர் தனது ஓட்டுநர் உரிமத்தை 6 மாத காலத்திற்கு ரத்து செய்து ஆணை பிறப்பித்தார்.
தன் மீது எந்த ஒரு வழக்கும் இல்லாத நிலையில், இது போன்று ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்துள்ளனர். எனவே, தனது ஓட்டு உரிமத்தை ரத்து செய்த ஆணையை ரத்து செய்து, தனது ஓட்டுநர் உரிமத்தை தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி புகழேந்தி விசாரித்து பிறப்பித்த உத்தரவில், கார் விபத்தில் ஓட்டுநரின் ஓட்டுநர் உரிமத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்து ரத்து செய்ய முடியாது. மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் துறையினர் இறுதி விசாரணையை முடிவடையாத நிலையில், ஓட்டுநரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து வட்டார போக்குவரத்து உத்தரவு பிறப்பிக்க முடியாது.
எனவே, கார் ஓட்டுநர் வசம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஓட்டுநர் உரிமத்தை உடனடியாக வழங்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல்!