மதுரை: அண்மையில் பெய்த கனமழை காரணமாக மதுரை செல்லூர் பகுதியை அடுத்த பீ.பீ.குளம், முல்லை நகர் பகுதிகள் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் பல வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வீட்டுக்குள் புகுந்த தண்ணீர்: இதனைத் தொடர்ந்து, போர்க்கால அடிப்படையில் இந்தப் பகுதியில் செல்லும் கால்வாய் வெட்டிச் சீரமைக்கப்பட்டு வெள்ளநீர் வடிக்கப்பட்டது. இதற்கிடையே இப்பகுதியில் நீர்நிலையை ஒட்டியுள்ள வீடுகள், கடைகளை உடனடியாக காலி செய்ய மதுரை மாவட்ட நிர்வாகம் நீர்வளத்துறையின் மூலமாக எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டியிருந்தது.
பேச்சு வார்த்தை: இதனால், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் ஒன்று திரண்டு விருதுநகர் செல்லும் வழியில் மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த முதலமைச்சரை சந்திப்பதற்காக வேனில் புறப்பட முயற்சி மேற்கொண்டனர். இதைப் பார்த்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி அம்மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
காலி செய்ய சொன்னால் எங்கே போவோம்? இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த வளர்மதி என்ற பெண் கூறுகையில், “எங்கே போவது என்று வழி தெரியாமல் நாங்கள் நிற்கிறோம். எங்களுடைய பெற்றோர் காலத்திலிருந்து இங்கே 80 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்களுக்கென்று எந்தவித சொத்தும் கிடையாது. இதுகுறித்து நாங்கள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் விடுக்கிறோம். எங்களது வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுங்கள். கடந்த மூன்று நாட்களாக போராடுகிறோம்” என கோரிக்கை வைத்தார்.
இதையும் படிங்க: வீடு புகுந்து சிறுவனை தாக்கிய கொடூர கும்பல்... "ஊர்ல இருக்க பயமா இருக்கு" பதறும் மக்கள்..உறுதியான நடவடிக்கை எடுக்குமா அரசு?
மாற்று இடம் கொடுத்தால் இங்கிருந்து போகலாம்: இதையடுத்து, அந்த பகுதியின் குடியிருப்போர் நலச் சங்கத்தின் பொருளாளர் சேகர் கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக நாங்கள் இங்கே வசித்து வருகிறோம். அரசாங்கமே அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது. மாநாகராட்சி வரி, பாதாள சாக்கடை வரி, பிஎஸ்ஓபி வீட்டுக் கடன் திட்டம் வரை எங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதற்கு தவணையைக் கூட நான் கட்டி வருகிறேன். இப்படியிருக்கையில் திடீரென வீட்டை காலி செய்யச் சொன்னால் நாங்கள் எங்கே போவது? இங்கு 1600 குடும்பங்கள் உள்ளன. இந்த மக்களுக்கு மாற்று இடம் கொடுத்து, காலி செய்யச் சொன்னால் அதன் பிறகு இது குறித்து சிந்திக்கலாம்” என்றார். இந்நிலையில் மதுரை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அதிகாரிகள் தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்