சென்னை: கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 19) எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை மற்றொரு வழக்கறிஞரிடம் கைமாற்றி விடுவதற்கான பேச்சுவார்த்தை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றுள்ளது. அப்போது வழக்கறிஞர் செந்தில்நாதன் தரப்பினருக்கும் வழக்கறிஞர் விஜயகுமார், விமல் உள்ளிட்ட தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து எழும்பூர் காவல் நிலையத்தில் இருதரப்பும் புகார் அளித்ததின் பேரில், 20 பேர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளக் கோரியும், நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணை நடத்தக் கோரியும் வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ்பாபு ஆகியோர் அமர்வு முன்பு முறையீடு செய்தார்.
அந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு மோதல் சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரிக்கப்படும் என ஒப்புதல் அளித்துள்ளனர்.
வழக்கின் பின்னணி: சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் ஜூலை 19 அன்று வழக்கறிஞர்கள் விஜயகுமார் மற்றும் செந்தில் நாதன் ஆகியோர் வழக்கு தொடர்பாக பேசிக்கொண்டிருந்த போது, தகராறு ஏற்பட்டதில் இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மாறி மாறி கைகளாலும், அங்கு இருந்த நாற்காலிகளாலும் தாக்கிக் கொண்டனர்.
பின்னர் எழும்பூர் உதவி ஆணையர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு சண்டையை தடுத்து நிறுத்தினர். இந்த தாக்குதலில் வழக்கறிஞர்கள் விஜய்குமார், விமல் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுக்கு காயம் ஏற்பட்டு ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், இந்த சம்பவம் குறித்து எழும்பூர் காவல் நிலையத்தில் இருதரப்பும் புகார் அளித்தனர்.
செந்தில்நாதன் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கறிஞர் விஜயகுமார், விமல் மற்றும் 10 பேர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, வழக்கறிஞர் விஜயகுமார் அளித்த புகாரின் பேரில் வழக்கறிஞர் செந்தில்நாதன், சக்திவேல் மற்றும் 6 பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி, இதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடொயோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: ரூ.1.50 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு; இந்திய மருத்துவ ஆணையம் பதிலளிக்க உத்தரவு!