சென்னை: திமுக துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான ஆ.ராசா, இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக, ஆ.ராசாவைக் கண்டித்து, இந்து முன்னணி சார்பில் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக கோவை மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, முதலமைச்சர் ஸ்டாலின், ஆ.ராசா மற்றும் பெரியார் ஆகியோரை கொச்சைப்படுத்தியும், இழிவுபடுத்தியும் பேசியதாக திமுக நிர்வாகி அனந்த குமார் என்பவர் புகார் அளித்தார்.
இதனடிப்படையில், பாலாஜி உத்தம ராமசாமி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பீளமேடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். கோவை மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் பாலாஜி உத்தம ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ் ஆஜராகி, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இதனையடுத்து, பாலாஜி உத்தம ராமசாமி, ஆ.ராசா குறித்து தனிப்பட்ட முறையில் பேசியதற்காக மூன்றாவது நபர் எப்படி புகார் அளிக்க முடியும் என நீதிபதி கேள்வி எழுப்பினார். பாலாஜி உத்தம ராமசாமி பேசியதை தான் ஏற்கவில்லை என தெரிவித்த நீதிபதி, குறிப்பிட்ட சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது தவறு எனவும் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர் கோபி, ஆ.ராசா மற்றும் அவரது குடும்பம் குறித்து மிகவும் இழிவாகப் பேசியுள்ளதாகக் கூறினார். இதையடுத்து, பாலாஜி உத்தம ராமசாமி மீதான வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: மீண்டும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனுவை தாக்கல் செய்தார் கனிமொழி !