சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வலியுறுத்தி, கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பகவத் சிங் தலைமையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் இன்று 7வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில், பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞர் அணி தொடர்பாளரும், வழக்கறிஞர் சமூக நீதிப்பேரவை தலைவருமான கே.பாலு முறையீடு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டுமென்ற கோரிக்கையில் மத்திய அரசு இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை என்பதால், தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டுமென வழக்கறிஞர் கே.பாலு கோரிக்கை வைத்துள்ளார்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் வயதான வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், ஏற்கனவே இரண்டு வழக்கறிஞர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் நீதிபதிகளின் கவனத்திற்கு வழக்கறிஞர் கே.பாலு கொண்டு வந்தார்.
அவரது முறையீட்டைக் கேட்ட தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு, மனுதாரரின் கோரிக்கை குறித்து, மனிதாபிமான அடிப்படையில் புரிந்து கொள்ள முடியும் என்றாலும், சட்ட ரீதியாக இதில் தங்களால் தலையிட முடியாது எனத் தெரிவித்தனர்.
மேலும், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசுதான் முடிவு எடுக்க முடியும் என்று தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும்படி அரசு பிளீடர் எட்வின் பிரபாகரிடம் அறிவுறுத்தினர்.
இதையும் படிங்க: சனாதன விவகாரம்: உதயநிதி, சேகர்பாபு, ஆ.ராசா தகுதி நீக்கத்திற்கு அவசியம் இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்!