சென்னை: கோயம்புத்தூரைச் சேர்ந்த வெங்கடாச்சலம் உள்ளிட்ட 100க்கும் அதிகமானோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், “மத்திய அரசின் ஒப்பந்தத்தின் படி கனிம வளங்களை எடுக்க ராயல்டியும், கட்டணமும் செலுத்தப்பட வேண்டும். சரக்கு மற்றும் சேவை வரி சட்டப் பிரிவு 11-இன் படி, வரி விலக்கு வழங்குகிறது. ஆனால், மத்திய ஜிஎஸ்டி பிரிவு 9(1) படி, குறிப்பிட்ட பொருட்களுக்கு என வகைபடுத்தி வரி செலுத்த வேண்டும் என கூறுகிறது.
மத்திய கலால் மற்றும் சுங்கத் தீர்வைகள் வாரியம், 2021ஆம் ஆண்டு நடந்த 45வது ஜிஎஸ்டி கூட்ட புதிய அறிவிப்பில், 18 சதவிகிதம் வரி விதிப்பு ஏற்கனவே அமலில் உள்ளது என அறிவித்துள்ளது. ஆனால், ராயல்டி சேவைக்கான கட்டணம் வசூலிக்காமல், ராயல்டி வரி என்ற பெயரில் வசூலித்து வருகிறது. முரண்பாடான இந்த வரி விதிப்புக்கு தடை விதிக்க வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், முகம்மது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹாஜா நசிருதீன், உச்ச நீதிமன்றத்தில் இந்த விவகாரம் நிலுவையில் இருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “ராயல்டிக்கான கட்டணத்தை சேவைக்காக வசூலிப்பதா அல்லது வரியாக வசூலிப்பதா என உச்ச நீதிமன்ற 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனால், உச்ச நீதிமன்ற உத்தரவின் படி, வழக்கு தீர்ப்பு வரும் வரை கனிமவள நிறுவனங்களிடம் இருந்து ஜிஎஸ்டி ஆணையம் வரி வசூல் செய்ய முடியாது.
மேலும், சம்பந்தப்பட்ட கனிமவள நிறுவனங்கள், ஜிஎஸ்டி ஆணையரிடம் 4 வாரத்தில் புதிதாக மனு அளிக்க வேண்டும். அதன் மீது சட்டத்திற்கு உட்பட்டு ஆணையம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.