சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் சென்னை எம்பி மற்றும் எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன.
இந்த குற்றம் மூலம் ஈட்டிய பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறையினர், செந்தில் பாலாஜிக்கு எதிராக சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, தனக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணை முடியும் வரை, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கின் விசாரணையை தள்ளிவைக்கக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் இன்று (மார்ச் 13) விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் காலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி, ஒரே நேரத்தில் ஐபிசி மோசடி வழக்கு மற்றும் அமலாக்கத்துறை வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கிறது. அமலாக்கத்துறை விசாரணை விரைவாகவும், மோசடி வழக்கை மெதுவாகவும் நடத்த வேண்டும், ஒரே நீதிபதியால் இதை நடத்த முடியாது.
மோசடி வழக்கு மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை வழக்கு விசாரணையை ஒரே நேரத்தில் விசாரித்து, சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினால் பாதிப்பு ஏற்படும். அதனால், சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். குறைந்தது 1 ஆண்டுக்கு அமலாக்கத்துறை விசாரணையை நிறுத்திவிட்டு, மோசடி வழக்கு விசாரணையை சிறப்பு நீதிமன்றம் தொடர்ந்து நடத்தி முடிக்கலாம் என தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், இந்த சமயத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது, அனைத்து தரப்பு விளக்கத்தையும் கேட்க வேண்டும் என தெரிவித்து அமலாக்கத்துறை தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 25ஆம் தேதி ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மறுஆய்வு மனு - உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை!