சென்னை: முந்தைய அதிமுக ஆட்சியில் திருப்பூர் தெற்கு தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த குணசேகரன், தொகுதி மேம்பாட்டு நிதியில், குடிநீர் தொட்டி, பேருந்து நிறுத்தம் கட்டியதில் முறைகேடு செய்ததாக, முகநூல் பக்கத்தில் அவதூறு பரப்பியதாக திமுக நிர்வாகி அருண் ஜீவா உள்ளிட்டோருக்கு எதிராக அதிமுகவைச் சேர்ந்த தினேஷ் என்பவர் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில், திருப்பூர் தெற்கு போலீசார் கடந்த 2021ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்திருந்தனர். திருப்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, திமுக நிர்வாகி அருண் ஜீவா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக நிர்வாகி அருண் ஜீவா தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி, ஆட்சேபத்துக்குரிய முகநூல் பதிவை மனுதாரர் தனது முகநூல் கணக்கில் இருந்து பதிவிட்டார் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனவும், இந்த பதிவால் பாதிக்கப்படாத தினேஷ், மனுதாரருக்கு எதிராக புகார் அளிக்க எந்த உரிமையும் இல்லை என வாதிட்டார்.
இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி முகநூல் பதிவுக்கும், மனுதாரருக்கும் உள்ள தொடர்பை நிரூபிக்க காவல்துறை எந்த ஆதாரத்தையும் தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, அருண் ஜீவா மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : ஒரு மணி நேரத்தில் தவெக கால்.. மறுநாளே அழைத்த தமன்.. கோவில்பட்டி மாணவருக்கு என்னதான் நடந்தது? - TVK and thaman helps student