சென்னை: சென்னை, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த பெண் வழக்கறிஞரும், டாக்டரான அவரது கணவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், 13 வயது மகனை யார் வளர்ப்பது என்பது தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்னை நிலவி வந்தது.
இந்நிலையில், மகன் அளித்த புகாரின் அடிப்படையில், தாய் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, தாய் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், "போக்சோ வழக்குப் பதிவு செய்வதற்காக குழந்தைகள் நலக்குழுவுக்கு கூகுள் பே மூலம் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் லஞ்சமாகக் கொடுக்கப்பட்டதாகவும், இதனை பெற்றுக் கொண்ட பின்னரே போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்ய பரிந்துரைக்கப்பட்டதாகவும், மேலும் லஞ்சப் புகார் குறித்து விசாரணை நடத்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், சிறுவனின் தந்தையிடம், குழந்தைகள் நலக் குழு உறுப்பினர் செல்வி பாஸ்கர் லஞ்சம் பெற்றதை உறுதி செய்துள்ளதாக" தெரிவிக்கப்பட்டது.
காவல் துறையினர் தரப்பில், "பாதிக்கப்பட்ட சிறுவனின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், வழக்கை ரத்து செய்யக்கூடாது" என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "சிறுவனின் தந்தையிடம் இருந்து குழந்தைகள் நலக்குழுவின் உறுப்பினர் லஞ்சம் வாங்கியுள்ளதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்துள்ளதாகவும், குழந்தைகள் நலக்குழுவின் தவறான வழிகாட்டுதல் அடிப்படையில், முறையாக விசாரிக்காமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி பெண் வழக்கறிஞர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
அதேநேரம், இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரியை நியமித்து, மேல் விசாரணை நடத்தி, நான்கு மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென தாம்பரம் காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோவின் விண்வெளி தொழிற்சாலை - வெளியான அசத்தல் அறிவிப்பு! - Kulasekarapattinam Spaceport Isro