சென்னை: கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், இது தொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்பட 7 பேர் மீது பதியப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதேநேரம், இந்த வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த முன் ஜாமீன் கோரிய மனுவை கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதனைத் தொடர்ந்து, முன்ஜாமீன் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகரும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், “புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அரசியல் பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பான ஆவணங்களை காவல் துறையினர் ஏற்கனவே கைப்பற்றியுள்ள நிலையில், தங்களிடம் விசாரணை நடத்த எந்த அவசியமும் இல்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் எம்.ஆர்.சேகரின் முன்ஜாமீன் மனு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் K.M.D.முகிலன், “தாங்கள் சொல்லும் நபருக்கு நிலத்தை விற்க வேண்டும் என்று எம்.ஆர்.சேகர் மிரட்டினார். ரூ.60 கோடி மதிப்பிலான நிலத்திற்கு ரூ.95 லட்சம் மட்டுமே தரப்பட்டுள்ளது. விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் விஜயபாஸ்கர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த நீதிபதி, 'எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதால் முன்ஜாமீன் மனு செல்லாததாகிவிட்டது என்று தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தார். அதேநேரம், எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகரை வரும் 29ஆம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க: நெல்லை, விருதுநகர், ராமநாதபுரம் தொகுதி தேர்தல் வெற்றிகளை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு!