சென்னை: வன விலங்குகள் மற்றும் வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கேரளா, கர்நாடகாவில் உள்ள மலைப் பிரதேசங்களை ஒப்பிடுகையில், தமிழகத்தில் உள்ள மலைப் பிரதேசங்களில் வாகனங்கள் அதிகம் செல்வதாக கூறினார்.
மணலிக்கு தினசரி குறிப்பிட்ட அளவு வாகனங்கள் மட்டுமே செல்ல வேண்டுமென உச்ச நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளதைப் போல, உதகை மற்றும் கொடைக்கானலுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தார்.
அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியே சாலை விரிவாக்கம் செய்யப்படுவதாக கூறினார். மேலும், மண் தரப் பரிசோதனை செய்யப்படுவதாகவும், இது தொடர்பாக நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து, மலைப் பிரதேசங்களில் உள்ள சாலைகள் தொடர்ச்சியாக விரிவாக்கம் செய்யப்பட்டால் மலைப்பகுதி என்ன ஆகும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மலைப் பகுதிகளில் சாலை விரிவாக்கம் செய்யப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும் கூறினர்.
ஊட்டி, கொடைக்கானலில் அதிகளவில் வாகனங்களை அனுமதித்தால் சுற்றுச்சூழல் என்ன ஆகும் என்றும், அதிகளவில் வாகனங்களை அனுமதித்தால், உள்ளூர் மக்கள் பாதிக்கப்படுவர் என்றும் குறிப்பிட்டனர். சுற்றுலா என்பது உதகையின் ஒரு சிறிய பகுதி மட்டுமே எனத் தெரிவித்த நீதிபதிகள், விவசாயம், தோட்டக்கலை உள்ளிட்டவையே அங்கு பிரதானம் எனவும் தெரிவித்தனர்.
மலையை அழித்துவிட்டால், எப்படி சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சாலை விரிவாக்கம் காரணமாகவே உதகையில் அதிகளவில் நிலச்சரிவு ஏற்படுவதோடு, வன விலங்குகள் இடப்பெயர்ச்சியும் நிகழ்வதாகக் கூறினர்.
சுற்றுலா சீசனில் ஒரு நாளைக்கு எத்தனை வாகனங்களை அனுமதிப்பது? எப்படி அனுமதி அளிப்பது என்பது குறித்து கொள்கையை அரசு வகுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக நாளை மறு நாளைக்குள் (மார்ச் 1) விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையைத் தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: சேலம் பெரியார் பல்கலை பதிவாளர் தங்கவேல் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!