சென்னை: சென்னை பெரவள்ளூரில் குமார் என்பவருக்கு சொந்தமான கடையை, பெரம்பூரைச் சேர்ந்த முகமது அபுதாஹிர் என்பவர் வாடகைக்கு எடுத்திருந்தார். இந்நிலையில் ராஜாபாதர் என்பவர் தலையிட்டுக் கூடுதல் வாடகை கேட்டு மிரட்டியதாகவும், தர மறுத்ததால், போலீசார் தூண்டுதலின் பேரில் கடைக்கு சீல் வைத்ததாகவும், சீலை அகற்றவும், கடையை நடத்த காவல்துறை பாதுகாப்பு வழங்கக் கோரி முகமது அபுதாஹிர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அபுதாஹிரின் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சம்பந்தமில்லாமல் தன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கடை உரிமையாளர் குமார் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதி முதல் தகவல் அறிக்கையைப் படித்துப் பார்த்தார். அதில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த வாய்மொழி உத்தரவின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக, தனது பெயரைக் குறிப்பிட்டுள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
மேலும், உதவி ஆய்வாளருக்கு முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்ய தெரியாதா? எனவும், முதல் தகவல் அறிக்கையில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதால் தான் சாட்சியம் அளிக்க செல்ல வேண்டுமா? என்றும் நீதிபதி ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.
காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரத்திற்கு உடனடியாக மன்னிப்பு கோரினார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி, முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த திரு.வி.க. நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நேரு மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு உத்தரவிட்டார். மேலும், நடவடிக்கை எடுக்கப்பட்டது தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 16ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: பேராசிரியர்கள் நியமன முறைகேடு வழக்கு: சென்னை பல்கலைக்கழகத்துக்கு ஐகோர்ட் உத்தரவு!