சென்னை: பருவமழை காலங்களில் வீணாக கடலில் கலக்கும் நீரை பாதுகாக்கும் வகையில், சென்னையில் உள்ள ஏரிகளை சீரமைக்கக் கோரி வழக்கறிஞர் ஜெகன்நாத் தாக்கல் செய்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது.
அப்போது, சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பருவமழை காலங்களில் வீணாகும் நீரை அருகில் உள்ள ஏரிகளுக்கு திருப்பிவிட்டு ஏன் பாதுகாக்கக் கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தமிழக அரசு பிளீடர் எட்வின் பிரபாகர், நீர்வளத்துக்கு என தனி துறை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், உபரி நீரை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமாக அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து, எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பருவமழை காலத்தில் வீணாக கடலில் கலக்கும் நீரை பாதுகாப்பது குறித்த திட்டம் உருவாக்க வேண்டும் எனவும், அது சம்பந்தமாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், மழை நீரை ஏரி குளங்களுக்கு திருப்பி விடுவதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும் எனக் கூறிய நீதிபதிகள், நீர்வளத் துறை உருவாக்கப்பட்ட பின் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: நடிகர் விஷால் - லைகா வழக்கை திடீரென முடித்து வைத்த நீதிமன்றம்.. என்ன காரணம்?