சென்னை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமாரை நியமித்து தமிழக அரசு அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், சுனில்குமாரின் நியமனத்தை ரத்து செய்யக் கோரி அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக சுனில்குமார் செயல்பட தடை விதிக்க வேண்டும். எந்த தகுதியின் அடிப்படையில் சுனில் குமார் அந்த பதவிக்கு வந்துள்ளார்? என விளக்கமளிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஈஷா மைய வளாகத்தில் தகன மேடை? - உச்சநீதிமன்றத்தில் தமிழக காவல்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்!
இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது தகுதியான பலர் இருக்கும் போது, ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியை தேர்வு வாரிய தலைவராக நியமிக்க முடியாது? என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
அதற்கு அரசுத்தரப்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி பதிலளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனுவுக்கு அக்டோபர் 25 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கும், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சுனில்குமாருக்கும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்