சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எதிர்வரும் 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் தங்களது கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி கடந்த 6ஆம் தேதி தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது. அடுத்த நான்கு வாரங்களில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் தேதி அறிவிக்கலாம் என்ற நிலையில், தங்களது மனு மீது இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு பொதுத்தேர்தலை போல இந்த தேர்தலுக்கும், தங்களது கட்சிக்கு சைக்கிள் சின்னம் வழங்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வு, சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி ஜி.கே.வாசன் அளித்த மனுவிற்குப் பதிலளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை நாளை மறுநாளுக்கு (பிப். 22) தள்ளிவைத்துள்ளது.
இதையும் படிங்க: சென்னை அண்ணா பல்கலை. மாணவர்கள் இங்கிலாந்து செல்வதற்கான விசா பயிற்சி!