சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் திருமுல்லைவாயலைச் சேர்ந்த டி.எச்.ராஜ்மோகன் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், 'சென்னையை அடுத்து உள்ள திருமுல்லைவாயலில் வனத்துறைக்கு சொந்தமான 40.95 ஏக்கர் நிலத்தை 'இம்பீரியல் கெமிக்கல்' நிறுவனத்துக்கு 1942-ஆம் ஆண்டு நிபந்தனைகளுடன் குத்தகைக்கு வழங்கப்பட்டது.
பின்னர், இந்த நிறுவனத்தின் பெயர் 'கிரசன்ட் டைஸ் அண்டு கெமிக்கல்' (Crescent dyes and chemicals ltd) என்று 1983-ஆம் ஆண்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கிடையில், முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன் தன் அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்தி வனத்துறைக்கு சொந்தமான இந்த நிலத்தை வருவாய்த்துறை நிலமாக மாற்றி, அந்த நிலத்தை அந்த கம்பெனி நிலமாக மாற்றியிருக்கிறார்.
அந்த நிறுவனத்திடம் இருந்து தன் பெயருக்கு நிலத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார். எனவே, இந்த நிலத்தை மீட்டு, மீண்டும் வனத்துறை நிலமாக மாற்றும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கருணை மனு: குடியரசுத் தலைவரின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது!
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க வழக்கறிஞர் ஆணையரை நியமித்தது. நீதிமன்ற உத்தரவின் படி நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஆணையர், அது வனப்பகுதி அல்ல என அறிக்கை தாக்கல் செய்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நேற்று (டிச.4) உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர் ஶ்ரீ ராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வுக்கு வந்தது. அப்போது மனுதாரர் பல உண்மைகளை மறைத்து யாரோ ஒருவருக்காக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
அதனால், மனுதாரருக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. அதில் ரூ.10 லட்சத்தை தனியார் நிறுவனத்துக்கு வழங்க வேண்டும். ரூ.10 லட்சத்தை சட்டப்பணிகள் ஆணையத்துக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் ஒரு வருடத்திற்கு பொது நல வழக்கு தாக்கல் செய்யவும் தடை விதித்து உத்தரவிட்டனர்.