சென்னை: சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “சேலம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சென்றாயப்பெருமாள் கோயிலில் விசேஷ காலங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை.
இந்தக் கோயிலில் கர்ப்பிணிகள், குழந்தைகள் என அதிகம் பேர் வழிபாடு நடத்துகின்றனர். கோயிலுக்குச் செல்லும் பாதையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சாலைகள் குறுகி, பக்தர்கள் கோயிலுக்கு எளிதாக செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.
அதேபோல், புரட்டாசி மாதம் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அதனால், பத்கர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பினேன். என் கோரிக்கை மனுவை பரிசீலித்து, பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், இந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, சென்றாயன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை தமிழ்நாடு அரசு செய்து கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: சாதியக் காரணங்களுக்காக வேலூரில் கோயில் இடிப்பு? கே.வி.குப்பம் அருகே நடப்பது என்ன?