சென்னை: கோவை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியைச் செலுத்தவில்லை என 2019ஆம் ஆண்டு புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரித்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியம், 2 கோடியே 44 லட்சம் ரூபாயைச் செலுத்தும்படி கோவை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கு உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 2 கோடியே 44 லட்சம் ரூபாயில் 30 சதவீத தொகையை ஆறு வாரங்களில் டெபாசிட் செய்யும்படி, 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவையும் எதிர்த்து அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதிகள் ஜெ.நிஷா பானு மற்றும் பி.தனபால் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பாக்கியில் 73.23 லட்சம் ரூபாயை மூன்று தவணைகளாக மத்திய தொழிலாளர் தீர்ப்பாயத்தில் செலுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதன்படி, ஜூலை 11ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 11ஆம் தேதிக்குள் இத்தொகையைச் செலுத்த உத்தரவிட்ட நீதிபதிகள், அவ்வாறு செலுத்தப்பட்ட பின்னர் பல்கலைக்கழகம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த பன்னிரெண்டு வாரங்களில், தகுதியின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டுமென தீர்ப்பாயத்திற்கு உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: திருச்செந்தூரில் கோழிச் சண்டையில் பெண் கொலை.. 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை!