நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்த பக்தவச்சலம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூரை அடுத்த கொத்தமங்கலம் கிராமத்தில் சர்வர் எண் 211 வண்டி பாதை உள்ளது. இதனை ஆக்கிரமித்து அதே பகுதியைச் சேர்ந்த மகுடபதி, தமிழ்ச்செல்வி உள்பட சிலர் வீடுகள் கட்டி சட்ட விரோதமாக குடியேறினர்.
இந்த ஆக்கிரமிப்புகளுக்கு துணை போகும் வகையில் பரமத்தி வேலூர் தாசில்தார் பட்டா வழங்கியுள்ளார். பொதுமக்கள் பயன்படுத்தும் வண்டிப் பாதையை இவர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனை உடனடியாக அகற்ற வேண்டும்" என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தார். இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், "இந்த ஆக்கிரமிப்புகளுக்கு அரசு அதிகாரிகள் துணை போய் உள்ளனர். இந்த இடங்களுக்கு முறைகேடாக பட்டாவும் வழங்கியுள்ளனர். எனவே, இந்த ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற உத்தரவிட வேண்டும்" என வாதிட்டார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் 8 வாரத்துக்குள் மனுதாரரின் மனுவைப் பரிசீலித்து ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: கழுகுகளின் எண்ணிக்கை தமிழகத்தில் உயர்ந்துள்ளது.. எழுத்துப்பூர்வ அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!