சென்னை: சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த ஜலீல் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் மக்கள் உளவியல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படுவதாகக் கூறியுள்ளார். சிக்னல்களில் வெப்பத்தை தணிக்க பசுமை பந்தல் அமைத்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக கடற்கரை, பூங்காக்களை நாடும் மக்களை இரவு 9.30 மணிக்கு மேல் காவல்துறையினர் துரத்தி விடுவதாக மனுவில் தெரிவித்துள்ளார். கடற்கரை, பூங்காக்களுக்கு வரும் மக்களை இரவு வரை இருக்க அனுமதிக்கக் கோரி டிஜிபிக்கும், மாநகர காவல் ஆணையருக்கும் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், தனது மனுவை பரிசீலித்து, வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கடற்கரை செல்லும் மக்களை துரத்தக் கூடாது என காவல் துறையினருக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி அமர்வு, தமிழக டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையரும் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் மாதம் தள்ளிவைத்தது.
இதையும் படிங்க: போக்சோ வழக்கில் கைதானவருக்கு அரசு மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி! - Heart Surgery For POCSO Convict