சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் திரைப்படத்தை மீடியா ஒன் க்ளோபல் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. பட வெளியீட்டுக்காக ஆட் பியூரோ அட்வர்டைசிங் நிறுவனத்திடம் 10 கோடி ரூபாயை கடன் பெற்றிருந்தது. இந்த கடனை திருப்பிச் செலுத்தும் வகையில், மீடியா ஒன் க்ளோபல் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் 5 கோடி ரூபாய்க்கான காசோலையை ஆட் பியூரோ அட்வர்டைசிங் நிறுவனத்திடம் வழங்கியிருந்தது.
ஆனால், காசோலையை வங்கியில் செலுத்திய போது, பணம் வழங்குவதை நிறுத்தி வைக்க கூறி மீடியா ஒன் க்ளோபல் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் வங்கிக்கு கடிதம் அனுப்பியிருந்ததால் காசோலைக்கு பணம் வழங்கப்படவில்லை. இதையடுத்து, மீடியா ஒன் க்ளோபல் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் மீதும், அதன் இயக்குனர் முரளி மனோகர் மீதும் ஆட் பியூரோ அட்வர்டைசிங் நிறுவன உரிமையாளர் அபிர்சந்த் நஹர், காசோலை மோசடி வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த அல்லிகுளம் நீதிமன்றம், முரளி மனோகருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்தது. மேலும், 7 கோடியே 70 லட்சம் ரூபாயை இழப்பீடாக அபிர்சந்த் நஹருக்கு வழங்கும்படி, முரளி மனோகருக்கு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை அமர்வு நீதிமன்றமும் உறுதி செய்ததை அடுத்து, முரளி மனோகர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இந்நிலையில், காசோலை மோசடி வழக்குகளில் கீழமை நீதிமன்றங்கள் விதிக்கும் இழப்பீட்டு தொகையில் 50 சதவீத தொகையை செலுத்தும்படி நிபந்தனை விதித்து தான் தண்டனை நிறுத்தி வைக்கப்படும் எனவும், இந்த வழக்கில் எந்த நிபந்தனையும் விதிக்கப்படாமல் முரளி மனோகரின் தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால், அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் எனவும் அபிர்சந்த் நஹர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி, ஏற்கனவே 8 கோடியே 99 லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுத்து விட்டதாக முரளி மனோகர் தரப்பில் கூறப்படுவதால், மீத கடன் தொகையான ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாயை நான்கு வாரங்களில் அல்லிகுளம் நீதிமன்றத்தில் வழக்கு எண்ணில் செலுத்த வேண்டும் என முரளி மனோகர் தரப்புக்கு உத்தரவிட்டார்.
அதேநேரம், நான்கு வாரங்களில் இத்தொகையை செலுத்தாவிட்டால், தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவு தானாக நீங்கி விடும் என்றும், தண்டனை தொடர்பாக அல்லிகுளம் நீதிமன்றம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "தணிக்கை செய்யப்பட்ட படத்தை தடை செய்ய யாருக்கும் உரிமை இல்லை" - உயர் நீதிமன்றம் கருத்து!