சென்னை: விலங்குகள் நல வாரியத்தின் சான்றிதழ் இல்லாமல், மாடுகளை அண்டை மாநிலங்களுக்கு வாகனங்களில் கொண்டு செல்வதைத் தடுக்கும் வகையில், அனைத்து சுங்கச் சாவடிகளிலும் சோதனை நடத்த தமிழ்நாடு அரசு மற்றும் இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், தமிழ்நாட்டில் இருந்து உரிய சான்றிதழ் இல்லாமல் மாடுகளை அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்ல 2002ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதாகவும், ஆனால் இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், உரிய சான்றிதழ்களுடன் மட்டுமே மாடுகளைக் கொண்டு செல்ல வேண்டும் என சோதனைச் சாவடிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக டிஜிபி தரப்பில் உறுதி அளிக்கப்பட்ட போதும், ஆயிரக்கணக்கான மாடுகள், உரிய சான்றிதழ் இல்லாமல் அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, உரிய அனுமதியின்றி மாடுகளைக் கொண்டு சென்றதாக இதுவரை 378 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, மாடுகள் உரிய சான்றிதழ்களுடன் தான் அண்டை மாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறதா என சரிபார்க்கும்படி தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், காவல் துறையினரும் சான்றிதழ்களைச் சரிபார்க்க வேண்டும் எனவும், விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.
மாடுகளை அண்டை மாநிலங்களுக்குக் கொண்டு செல்வது தொடர்பாக 2007ஆம் ஆண்டு டிஜிபி பிறப்பித்த சுற்றறிக்கையைக் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 24ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: “குற்றவியல் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது” - பொய் புகார் என தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி! - Fake Ganja Case