சென்னை: மதிமுக சார்பில், அதன் பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 1996ஆம் ஆண்டு முதல் சட்டமன்றம், மக்களவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டதாகவும், மதிமுக போட்டியிட்டுள்ளதாகவும், 2006ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 6 சதவீதத்திற்கு குறைவான வாக்குகள் பெற்றதாகக் கூறி, கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
2014ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டது போல, எதிர்வரும் மக்களவைத் தேர்தலிலும் பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், தேர்தல் ஆணையத்திடம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணப்பித்ததாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்த வழக்கை கடந்த மார்ச் 7 அன்று விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, மதிமுக தேர்தல் சின்னம் வழக்கில் இரண்டு வாரங்களில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.
இந்நிலையில், தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்ய மார்ச் 28ஆம் தேதி கடைசி நாள் என்பதால், தங்கள் கோரிக்கையை விரைந்து பரிசீலித்து, பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபூர்வாலா, நீதிபதி பரதசக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மதிமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “தேர்தல் ஆணையம் தங்கள் கட்சியின் நிர்வாகிகள் விவரங்களைக் கேட்டு மார்ச் 21ம் தேதி அனுப்பிய கடிதம் மார்ச் 25ஆம் தேதி பெறப்பட்டது. வேட்புமனுத் தாக்கல் செய்ய அவகாசம் இல்லாத நிலையில், தங்களால் விளக்கம் அளிக்க முடியாது.
கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் போதுமான நிர்வாகிகள் பட்டியல், வரவு செலவு விவரங்கள் ஆகியவை தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், தற்போது மீண்டும் விளக்கம் கேட்பதை ஏற்க முடியாது” என தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கான அங்கீகாரத்தை மதிமுக இழந்து விட்டது. அதனால், தேர்தல் அதிகாரி அளிக்கும் பொது சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும். விதிகளின் படி சின்னம் கோரும் கட்சிகள், குறைந்தது 2 தொகுதிகளில் போட்டியிட வேண்டும்” என தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், “தேர்தல் விதிகளின் படி குறைந்தது 6 ஆண்டுகள் அங்கீகாரம் இல்லாமல் இருந்தால் சின்னத்தைக் கேட்க முடியாது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மாற்றுச் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக, தற்போது எப்படி சின்னத்தை ஒதுக்க வேண்டும் என கூற முடியும்?” என்ற கேள்விக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க, இன்று பிற்பகல் விசாரணையைத் தள்ளிவைத்தனர்.
அதன்படி, வழக்கு பிற்பகல் விசாரணைக்கு வந்த போது, பம்பரம் சின்னம் பொது சின்னமாகவோ, ஒதுக்கீட்டுச் சின்னமாகவோ வகைப்படுத்தப்படவில்லை எனவும், மதிமுக அளித்த விண்ணப்பத்தின் மீது நாளை (மார்ச் 27) காலைக்குள் முடிவெடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதேநேரம், நாளை தேர்தல் ஆணையம் முடிவெடுத்து அறிவிப்பதால். இந்த வழக்கை நாளைக்கு தள்ளிவைக்க வேண்டும் என மதிமுக தரப்பில் கோரப்பட்டது.
இதையடுத்து, கடந்த சட்டமன்றத் தேர்தலில் மதிமுக வேட்பாளர்கள் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டதையும், திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கேட்டு இன்று அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தின் மீது நாளை காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நாளை பிற்பகலுக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: வடசென்னை வேட்பு மனு தாக்கல் விவகாரம்; ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம்! - North Chennai Nomination Issue