சென்னை: கடந்த 2021ஆம் ஆண்டு பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக, முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை, விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த 2024 பிப்ரவரி மாதம் 12ம் தேதி உறுதி செய்தது.
இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், சரணடைவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரி ராஜேஷ் தாஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் சிபிசிஐடி சார்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராகி, ராஜேஷ் தாஸ்க்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கவும், சரணடைய விலக்களிக்கவும் எதிர்ப்பு தெரிவித்தார். காவல்துறையில் உயர் பதவி வகித்ததால் தனக்கு விலக்கு அளிக்க வேண்டுமென ராஜேஷ் தாஸ் கூறுகிறார். ஆனால் அவரால் பாதிக்கப்பட்டதும் காவல்துறை உயர் அதிகாரி தான் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ராஜேஷ் தாஸ் தரப்பில், தனக்கெதிராக சதி செய்யப்பட்டுப் பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் தண்டனையை நிறுத்த வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் ராஜேஷ் தாஸ் மனு மீதான தீர்ப்பு ஏப்ரல் 17ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) நீதிபதி எம். தண்டபானி முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, "தண்டனையை நிறுத்தி வைக்க எந்த காராணமும் இல்லை. அதனால் மனுவை தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும், ராஜேஸ் தாஸ் சம்மந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யலாம். ஜாமீன் மனுவை விசாரிக்கும் அன்றே சட்டத்திற்கு உட்பட்டு தீர்ப்பு வழங்க வேண்டும்" என விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சித்திரை திருவிழா: வாராரு வாராரு அழகர்..! பச்சைப் பட்டு உடுத்திய அழகர்.. விண்ணைப் பிளந்த கோவிந்தா கோஷம்..! - Madurai Kallazhagar Festival