சென்னை: பர்மாவில் இருந்து தாயகம் திருப்பியவர்களுக்கு வீட்டுவசதி ஏற்படுத்திக் கொடுப்பதற்காக அமைக்கப்பட்ட பாலவாக்கம் பர்மா இந்தியர்கள் வீட்டு வசதி கட்டுமான கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமாக, காஞ்சிபுரம் மாவட்டம், பாலவாக்கம், திருவள்ளுவர் நகர் பர்மா காலனி பகுதியில் 24 ஏக்கர் நிலம் உள்ளது.
இதில், 4 ஏக்கர் 47 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து, 250 குடும்பத்தினர் வீடுகள் கட்டி வசித்தனர். அவர்களை காலி செய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி பாலவாக்கம் பர்மா இந்தியர்கள் வீட்டுவசதி கட்டுமான கூட்டுறவுச் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், ஆக்கிரமிப்பாளர்களை காலி செய்ய மாவட்ட ஆட்சியரும், தாசில்தாரரும் உத்தரவுகளைப் பிறப்பித்தனர். இந்த உத்தரவுகளை எதிர்த்து, ஆக்கிரமிப்பாளர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்த உத்தரவை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
இதைத் தொடர்ந்து, பர்மா இந்தியர்கள் வீட்டுவசதி கட்டுமான கூட்டுறவுச் சங்க நிலத்தை காலி செய்து, கண்ணகி நகரில் ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு குடிபெயரும்படி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரி, ஆக்கிரமிப்பாளர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, முடிவு காணப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அதே விவகாரம் தொடர்பாக ஆக்கிரமிப்பாளர்கள் வழக்கு தொடர முடியாது எனக் கூறி, வழக்குகளைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 69.46 சதவீத வாக்குகள் பதிவு.. மறுவாக்குப்பதிவு உண்டா? - Lok Sabha Election 2024