சென்னை: நிதி மோசடியில் ஈடுபட்டதற்காக செல்வராஜ் என்பவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். எனவே, இதனை ரத்து செய்யக் கோரி செல்வராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் வி.சிவஞானம் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவல்துறை தரப்பில், மனுதாரரின் உதவியுடன் போலி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டதோடு, போலி ஊதியச் சான்று தயாரிக்கப்பட்டு, அதன் மூலம் வங்கியில் கடன் பெறப்பட்டு, 3 கோடியே 30 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டு உள்ளதாகவும், இது அனைத்துமே மனுதாரரின் உதவியுடன் நடைபெற்றதாலேயே குண்டர் தடுப்புச் சட்டம் பிரயோகிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், இவை அனைத்தும் தனி நபர் சார்ந்த குற்றங்கள் எனவும், போலீசார் விசாரணை நடத்தி அந்த பணத்தை மீட்கலாம் எனக் கூறி, செல்வராஜ் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும், யார் குண்டர்கள் என்பது குறித்து அரசு தீவிரமாக சிந்திக்க வேண்டுமெனவும், இது போல குண்டர் தடுப்புச் சட்டத்தை சாதாரணமாக பயன்படுத்தப்படுவதை நீதிமன்றம் அனுமதிக்காது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், சட்டவிரோதமாக ஒருவர் ஒரு நாள் கைது செய்யப்பட்டு காவலில் இருந்தாலும், அது சட்டவிரோதம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதாக நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சவுக்கு சங்கர் மீது மீண்டும் பாய்ந்த குண்டாஸ்: 'அந்த விவரங்களையெல்லாம் தாங்க'; தமிழ்நாடு போலீசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!