மதுரை: மதுரை ஆதீன மடத்தின் 292வது பீடாதிபதி அருணகிரிநாதர் உடல்நிலை குறைவால் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி காலமானார். இதைத்தொடர்ந்து மதுரை ஆதீனத்தின் மறைவால் 293வது மடாதிபதியாக ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது மதுரை ஆதீன பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நித்தியானந்தா தரப்பில், சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், கடந்த 2012ஆம் ஆண்டு தன்னை (நித்தியானந்தாவை) மதுரை ஆதீனம் மடத்தின் இளைய பீடாதிபதியாக அருணகிரிநாதர் அறிவித்தார். இது கடும் சர்ச்சைகளை சந்தித்த நிலையில் 2019ஆம் ஆண்டு இந்த அறிவிப்பை அவர் திரும்ப பெற்றது. இது தொடர்பான வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், மதுரை ஆதீன மடத்தின் 292வது பீடாதிபதி அருணகிரிநாதர் உடல்நலக் குறைவால் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்டு 12ஆம் தேதி காலமானார். முறைப்படி அவருக்கு பின் நான் தான் மதுரை ஆதீனமாக பொறுப்பேற்க வேண்டும்.
ஆனால், தற்போது எந்த வித ஒப்பந்தமோ, உயிலோ இல்லாமல், மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவுக்கு பிறகு, 293வது மடாதிபதியாக ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது ஏற்புடையது அல்ல. இது விதிமீறல்.
இந்த நிலையில், மதுரை ஆதீனம் அருணகிரிநாதருக்குப் பதிலாக, 293வது மடாதிபதியாக உள்ள ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகளை இந்த வழக்கில் மதுரை நீதிமன்றம் சேர்த்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து மறு ஆய்வு வேண்டும் என சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி விஜயகுமார் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைந்த பிறகு அவருக்கு பதிலாக, 293வது மடாதிபதியாக ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக பரமாச்சாரிய சுவாமிகளை மதுரை நீதிமன்றம் ஏற்று கொள்ள வில்லை. மதுரை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் எதிர் மனுதாரராக சேர்த்து மதுரை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்பது இந்த வழக்கை நடத்துவதற்காக தான் என நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: ஈஷா மின் தகன மேடை விவகாரம்: ஈஷா ஆதரவாளர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு! - Isha Yoga Crematorium Issue