சென்னை: ஆபாசப்படங்கள் பார்ப்பது குற்றமா? என்ற கேள்விக்கு பலரின் பதில் குற்றம் என்பதாகவே இருக்கும். ஆனால், குழந்தைகளின் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமில்லை என்று, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அடுத்தவரின் சுதந்திரம் பாதிக்காமல் ஆபாச வீடியோ பார்ப்பது குற்றமாகாது? என உயர் நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் வழங்கிய தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.
சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த இளைஞர் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக அம்பத்தூர் காவல் நிலையத்தில் கடந்த 2020ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
உயர் நீதிமன்ற உத்தரவு: இந்த விசாரணையை எதிர்த்து இளைஞர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் நீதிபதி வழங்கிய உத்தரவு நாடு முழுவதும் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. அதில், “தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000, பிரிவு 67- B, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் (போக்சோ) 2012, பிரிவு 14(1) படி குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோவை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமில்லை. மற்றவர்களுக்கு அனுப்பினால் மட்டுமே குற்றம்.
மேலும், ஆபாசப்படங்கள் பார்ப்பது எதிர்மறையான எண்ணங்களை ஏற்படுத்துவதோடு, மனம் மற்றும் உடல் ரீதியாக வளர் இளம் பருவத்தினர் பாதிக்கப்படுவதால் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். என்று கூறி வழக்கிலிருந்து இளைஞரை விடுவித்து உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவு சமூக ஆர்வலர்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் நல ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
இதையும் படிங்க: ஆபாச படங்கள் பார்ப்பது, பதிவிறக்கம் செய்வது குற்றமா? - உச்சநீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு
உச்ச நீதிமன்றம் உத்தரவு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, “குழந்தைகளின் ஆபாச படங்களை செல்போனில் வைத்திருந்தாலே குற்றம் என்றும் குழந்தைகள் ஆபாச படம் என்பதற்கு பதிலாக (Child Sexual and Exploitative and Abuse Material) ‘குழந்தைகள் பாலியல் துஷ்ப்ரயோகம் மற்றும் சுரண்டல்’ என்ற அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என கூறி, குழந்தைகளின் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல என்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து சென்னை உயர் நீதிமன்றம் வழக்கறிஞர் நடராஜன் ஈடிவி பாரத் தமிழிடம் கூறியதாவது, “சமுதாய வளர்ச்சிக்கு ஏற்ப சட்டம் மாற வேண்டும். சமுதாயத்தில் போதுமான பாதுகாப்பு அமைப்பு இல்லை. நீதிமன்ற உத்தரவின் படி கட்டாயம் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். பெரும்பாலும், ஆபாசப்படங்கள் அமெரிக்காவில் இருந்து பதிவேற்றம் செய்யப்படுகிறது.
அதை இந்தியாவால் கண்காணிக்க முடிவதில்லை. அதனால், இந்திய சைபர் பிரிவு அமெரிக்க கண்காணிப்பு குழுவுடன் இணைந்து செயல்பட வேண்டிய நிலை உள்ளது. இந்தியாவில் குழந்தைகள் பாதுகாப்புக்காக போக்சோ, சிறார்கள் பாதுகாப்பு சட்டம், குழந்தைகள் கடத்தல் தடுப்பு சட்டம், குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டம், குழந்தை திருமண தடுப்பு சட்டங்கள் உள்ளது.
சட்டம் இயற்ற வேண்டும்: ஆதலால், ஆபாச படங்கள் பார்ப்பதை தடுக்க சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். தமிழகத்தில் 2025க்குள் குழந்தைகள் தொழிலாளர்கள் முறை முற்றிலும் ஒழிக்கப்படும் என அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் 13 வயது குழந்தைகள் வரை இணையதளம் பார்ப்பதை தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முரளி கூறியதாவது, “குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. அதை தடுக்க சட்டத்தில் மாறுதல்கள் கொண்டு வருவது அவசியம். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறைக்க ஆபாச படங்களை தடை செய்ய முடியாவிட்டாலும், கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கலாம். உயர்நீதிமன்றம் சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கினாலும், உச்சநீதிமன்றம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்க தனது தீர்ப்பின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது” என தெரிவித்தார்.