சென்னை: சென்னையைச் சேர்ந்த தேவதாஸ் மனோகரன், அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக பணியாற்றிய போது, உதவி பேராசிரியர் நியமனம் உள்ளிட்டவற்றில் முறைகேடு செய்ததாகக் கூறி, அவருக்கு கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மெமோ வழங்கப்பட்டது.
இதனை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மெமோவை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து பல்கலைக்கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்த இரு நீதிபதிகள் அமர்வு, தேவதாஸ் மனோகரனுக்கான ஓய்வூதியப் பலன்களை எட்டு வாரங்களில் வழங்க வேண்டும் என 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என தேவதாஸ் மனோகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நேரில் ஆஜராகும்படி அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார் மற்றும் கே.குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ் நேரில் ஆஜராகவில்லை. நேரில் ஆஜராகுமாறு பிறப்பித்த நோட்டீசை பெற்றுக் கொண்டும் வேண்டுமென்றே ஆஜராகவில்லை எனக்கூறி, பதிவாளர் ஜே.பிரகாஷுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிபதிகள், விசாரணையை ஜூலை 15ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: இட ஒதுக்கீட்டில் பதவி உயர்வு வழங்கிய விவகாரம்; 3 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு!