சென்னை: ஈரோட்டை சேர்ந்த எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "எனக்கு எச்.ஐ.வி பாசிடீவ் இருந்ததால் எனக்கு பிறந்த பெண் குழந்தையை வேறு ஒரு பெண்ணிடம் கடந்த 2020ஆம் ஆண்டு எனது கணவர் ஒப்படைத்தார்.
அப்போது, தற்காலிகமாக ஒப்படைக்கிறோம். கேட்கும் போது குழந்தையைத் தரவேண்டும் என்று கூறிதான் எனது கணவர் குழந்தையை அந்த பெண்ணிடம் ஒப்படைத்தார். ஆனால், குழந்தையை ஒப்படைக்கக் கோரிய போது, எனது குழந்தையின் வளர்ப்புத் தாயாக இருந்த அந்த பெண் எனது குழந்தையைத் தர மறுத்துவிட்டார்.
மேலும் எனது குழந்தைக்கு 3 வயது 9 மாதம் ஆகிறது. குழந்தையின் பாதுகாப்பு கருதி வளர்ப்புத்தாயாக அறிவிக்கக் கோரி, அந்த பெண் ஈரோடு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. எனவே, சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ள எனது குழந்தையை ஒப்படைக்க அந்த பெண்ணுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள், குழந்தைக்கு வளர்ப்புத் தாயாக அறிவிக்கக் கோரி தாக்கல் செய்த வழக்கு ஈரோடு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை ஈரோடு நீதிமன்றம் 6 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும், பெற்ற தாய் குழந்தையை வாரம் ஒரு முறை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை சந்திக்க அனுமதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டு குழந்தையை ஒப்படைக்கக் கோரி, 3 வயது குழந்தையின் தாய் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 104 சிவில் நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்து உத்தரவு!