சென்னை: நில மோசடி விசாரணை தொடர்பாக தவறான தகவலை பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில், யூ-டியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நில மோசடி தொடர்பாக யூ-டியூப் சேனலில் சவுக்கு சங்கர் தவறான தகவல் பரப்புவதாக சென்னை மத்திய குற்றப்பிரிவின் நில மோசடி பிரிவு இன்ஸ்பெக்டர் சிவ சுப்ரமணியன் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் புகார் அளித்தார். இந்த புகார் மீது விசாரணைக்கு ஆஜராகும்படி சவுக்கு சங்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. விசாரணை அமைப்பின் முன்பு நேரில் ஆஜரான சவுக்கு சங்கர் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்பதால் சவுக்கு சங்கர் மீது பாரதிய நியாய சன்ஹீதா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் ஜாமின் கேட்டு சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனுவை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது, இதையடுத்து தனக்கு எதிராக 3 பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கைது செய்யும் அளவுக்கான குற்றம் இல்லை என தெரிவித்து சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.