சென்னை: சென்னை காசிமேட்டைச் சேர்ந்த நிரோஷா என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், போக்சோ வழக்கில் தனது கணவர் ராஜேஷ்குமாருக்கு பத்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இந்நிலையில், முதல் மகனுக்கு மருத்துவச் செலவுகளுக்கு நிதி திரட்ட வேண்டும் என்றும், இளைய மகனின் படிப்புச் செலவுக்கு நிதி திரட்ட வேண்டியுள்ளதாலும், 21 நாட்கள் விடுப்பு கோரி, சிறை நிர்வாகத்திடம் அளிக்கப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.நதியா ஆஜராகி, மனுதாரரின் கணவருக்கு போலீசார் பாதுகாப்பின்றி விடுப்பு வழங்க வேண்டுமென்று வாதிட்டார். இதனையடுத்து, சிறை நிர்வாகம் சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக் ஆஜராகி, ராஜேஷ் குமாருக்கு விடுப்பு வழங்குவது குறித்து சிறை நன்னடத்தை அதிகாரி சாதகமான அறிக்கை அளிக்கவில்லை என கூறினார்.
இதனையடுத்து, ராஜேஷ் குமாருக்கு நிபந்தனையுடன் 21 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்குவதாக தெரிவித்த நீதிபதிகள், இதனை போலீசார் பாதுகாப்பின்றி வழங்கியும் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: மாவட்ட நிர்வாகத்திற்கு இது மிகப்பெரிய வெட்கக்கேடு - உயர் நீதிமன்றக்கிளையின் அதிருப்திக்கு காரணம் என்ன?