கடலூர்: கிளியனூர் அருகே உள்ள மதுக்கடை அருகே கடந்த செப்.18 ஆம் தேதி இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த போது, அபினேஷ் என்ற நபர் தனது நண்பருடன் அங்கு நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அபினேஷ் மற்றும் அவரது நண்பரை அங்கிருந்து செல்லுமாறு காவல்துறையினர் கூறியுள்ளனர். இதனை ஏற்க மறுத்து போலீசாருடன் அபினேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு போலீசாரின் வாக்கி டாக்கியை பிடுங்கி அதனை அருகில் இருந்த நீர்நிலையில் வீசியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து , அபினேஷை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். அதனை தொடர்ந்து, இந்த வழக்கில் ஜாமீன் கோரி அபினேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதையும் படிங்க: தொழில்நுட்ப பணிகளுக்கு ஹேங்மேன்களை பயன்படுத்தும் விவகாரம் - TNEB -க்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
இந்த மனு நீதிபதி கே.ஜி. திலகவதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.காசிராஜன், மனுதாரர் மீது எந்த தவறும் இல்லை என்றும், பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அருள் ஜோசப் செல்வம், மதுக்கடை அருகே நின்று கொண்டிருந்த மனுதாரரை அங்கி இருந்து செல்லுமாறு அறிவுறுத்திய போது, அவர் மறுத்ததோடு போலீசாரிடம் வீண் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு வாக்கி டாக்கியை தண்ணீரில் எறிந்ததாக கூறி ஜாமீன் வழங்க கூடாது என வாதிட்டார்.
இதனையடுத்து, அபினேஷ்க்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தினமும் காலை ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென அவருக்கு நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்