சென்னை: ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், சிஐடியூ தொழிற்சங்க இணைப்பு பெற்ற சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் என்ற பெயரில், தொழிற்சங்கத்தை தொடங்கி, அதை பதிவு செய்யக் கோரி தொழிற்சங்கங்கள் பதிவாளருக்கும், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையருக்கும் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த விண்ணப்பத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தங்கள் தொழிற்சங்கத்தை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என சங்கத்தின் சார்பில் சிஐடியூ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில், “நிறுவனத்தின் பெயரை தொழிற்சங்கத்திற்கு பயன்படுத்தக் கூடாது என சாம்சங் நிறுவனத்தின் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் தங்கள் தொழிற்சங்கத்தை அரசு பதிவுத்துறை பதிவு செய்யவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் விண்ணப்பத்தை பரிசீலித்து தொழிற்சங்கத்தை பதிவு செய்து சான்று வழங்கும்படி தொழிற்சங்கங்கள் பதிவாளருக்கும், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையருக்கும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் சாம்சங் நிறுவனம் பெயரில் தொழிற்சங்கம் தொடங்க அந்த நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று (டிச.5) நீதிபதி பரதசக்ரவர்த்தி முன்பு, விசாரணைக்கு வந்தபோது சாம்சங் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி. ராஜகோபால், தங்கள் நிறுவனத்தில் அரசியல் தலையீடு இருக்க கூடாது என்றும், நிறுவனத்தின் பெயரில் தொழிற்சங்கம் தொடங்குவது அடிப்படை உரிமை அல்ல என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சிதம்பரம் கோயில் நிலம் விவகாரம்: கூடுதல் ஆதாரங்களை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு அனுமதி!
அதனால், நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி தொழிற்சங்கம் தொடங்கக் கூடாது எனவும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, தொழிலாளர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஜி.ஆர் பிரசாத், தொழிற்சங்க சட்டத்தின் கீழ் சங்கத்தை பதிவு செய்வது அடிப்படை உரிமை என்றும், கொரியாவில் கூட சாம்சங் பெயரை பயன்படுத்தி தொழிற்சங்கம் உள்ளதாகவும் தெரிவித்தார். தொழிற்சங்கம் தொடங்குவது தொழிலாளர்களின் அடிப்படை உரிமை, இதுபோல் பல நிறுவனங்களின் பெயர்களில் தொழிற்சங்கங்கள் துவங்கப்பட்டுள்ளதாக வாதிட்டார்.
அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் இது குறித்து சட்டத்திற்கு உட்பட்டு பரீசிலித்து முடிவெடுக்கப்படும் என்று பதிலளித்தார். அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, தொழிற்சங்க அங்கீகாரம் தொடர்பான மனுவை ஆறு வாரத்துக்குள் பரீசிலித்து முடிவெடுக்குமாறு பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.