சென்னை: சிவில் வழக்குகளில் காவல்துறை தலையிடக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் பல தீர்ப்புகள் வழங்கியுள்ள நிலையில், மேட்டூர் காவல் நிலைய அதிகாரிகள் சிவில் வழக்குகளில் தலையிடுவது, பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்குகளில் தலையிட்டு கட்டப்பஞ்சாயத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், இதைக் கண்டித்து போராட்டம் நடத்த அனுமதி கோரி, திராவிடர் விடுதலைக் கழகத்தின் மேட்டூர் நகரச் செயலாளர் குமரப்பா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
மேலும், மேட்டூர் சதுரங்காடி திடலில் திராவிட விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரிய போது காவல்துறை மறுத்து விட்டதாகவும் அவரது மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் திருமூர்த்தி, சம்பந்தப்பட்ட இடத்தில் தொடர்ந்து அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்ட இடம் என்றும், இதனால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், ஜனநாயக ரீதியில் தான் இந்த போராட்டம் நடைபெறுவதாக தெரிவித்தார். இதையடுத்து, நிபந்தனைகளுக்கு உட்பட்டு செப்டம்பர் 4ஆம் தேதி போராட்டம் நடத்த அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 2 லட்சம் கடனுக்கு ரூ.2 கோடி வட்டி.. "தென் மாவட்டங்களில் தொடரும் கந்துவட்டி கொடுமை" - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!