சென்னை: கடந்த நான்கு ஆண்டுகளாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முகமது ரிப்பாஸ் என்பவரை, சிறைக் காவலர்கள் தனிமைச் சிறையில் அடைத்திருப்பதற்கு அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், விதிகளை மீறி ஏன் தனிமை சிறையில் அடைக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையைச் சேர்ந்த ரோஷன் சல்மா என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், விசாரணைக் கைதியாக கடந்த நான்கு ஆண்டுகளாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது கணவர் முகமது ரிப்பாஸை, சிறைக் காவலர்கள் கண்ணன், சதீஷ் மற்றும் முரளி ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரை, போலீசார் ஷூ கால்களால் சரமாரியாக தாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். சிறைக் காவலர்கள் தாக்கியதில், முகமது ரிப்பாஸ் பலத்த காயமடைந்துள்ளதாகவும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (மார்ச் 28) விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக் ஆஜராகி, விசாரணையின் போது ரிப்பாஸ் சிறை அதிகாரிகளிடம் கடுமையாக நடந்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.நதியா, ரிப்பாஸ் தற்போது தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், சிறைக் காவலர்களையும், சக கைதிகளையும் கூட அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்தார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், “சிறைக் கைதிகள் ஏதேனும் தவறு செய்தால் அவர் மீது வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். மாறாக, விதிகளை மீறி ஏன் தனிமை சிறையில் அடைக்க வேண்டும்?” என கேள்வி எழுப்பினர். இதை தொடர்ந்து ரிப்பாஸை தனிமை சிறையில் இருந்து மாற்ற உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஏப்.8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.