சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் வடக்கு மாட வீதியில் உள்ள அருள்மிகு அகத்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயிலுக்குச் சொந்தமான 2,779 சதுர அடி நிலம், சென்னை உரிமையியல் நீதிமன்ற தீர்ப்பின்படி, சித்திக்கா என்ற பெண்மணிக்கு விற்கப்பட்டுள்ளது.
சித்திக்காவின் மகள், அந்த நிலத்தை தங்களுக்கு விற்க பத்திரப்பதிவுத் துறையை அணுகிய போது, கோயில் தொடர்புடைய சொத்துக்களை பத்திரப் பதிவு செய்யக்கூடாது என கோயிலின் பரம்பரை அறங்காவலர் அளித்த கடிதத்தின் அடிப்படையில், தங்கள் பத்திரத்தை பதிவு செய்ய பத்திரப்பதிவுத் துறை மறுத்து விட்டதால், அந்த உத்தரவை ரத்து செய்து, பத்திரப்பதிவை செய்ய உத்தரவிட வேண்டும் என பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸின் சார்பில், அதன் நிர்வாக இயக்குனரான பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கோயிலுக்குச் சொந்தமான நிலம் தொடர்பான பத்திரப்பதிவை ஏற்க மறுத்த பதிவுத்துறை உத்தரவு செல்லும் எனக் கூறி, சூப்பர் குட் பிலிம்ஸ் மற்றும் சித்திக்கா ஆகியோர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இவ்வாறான தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்யக் கோரி, சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்திரி மற்றும் சித்திகா ஆகியோர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு, இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி கோயில் நிலத்தை தனியாருக்கு விற்பனை செய்ய அனுமதித்து, உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செல்லாது எனவும், அதன்பின் மேற்கொள்ளப்பட்ட விற்பனை பத்திரப்பதிவும் செல்லாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்தது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
மேலும், அறநிலையத்துறை சட்டப்படி மூன்று மாதங்களில் நிலத்தை மீட்டு, கோயில் நலனுக்கு பயன்படுத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். கோயில் நிலங்களை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றவர்கள், போலி உரிமை மூலம் உரிமை கோரும் நிகழ்வுகள் நடைபெற்று வருவதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அதிகாரிகளின் துணையில்லாமல் இது சாத்தியமில்லை எனவும், வேலியே பயிரை மேயும் இது போன்ற செயல்களைக் கடுமையாக கையாள வேண்டும் எனவும், கோயில் நிலங்கள் அபகரிப்பு, ஆக்கிரமிப்புகளை தடுக்க அரசும், அறங்காவலர்கள் குழுவும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: பூஜைக்காக மட்டும் திறக்கப்படும் திரவுபதி அம்மன் கோயில்.. பாதுகாப்பை உறுதிப்படுத்த காவல்துறைக்கு உத்தரவு!