தஞ்சாவூர் : தஞ்சையை அடுத்துள்ள மைக்கேல்பட்டி தனியார் கிறிஸ்தவ பள்ளிக்கூட விடுதியில், தங்கி படித்து வந்த அரியலூரைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். மாணவியை மதம் மாற சொல்லி கட்டாயப்படுத்தியதால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு தொடர்பாக, அந்த பள்ளியின் நிர்வாகியான சகாயமேரியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் சகாயமேரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதில், "மாணவி உயிரிழப்பிற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரை மதம் மாறக்கோரி யாரும் வற்புறுத்தவில்லை. எனவே, இந்த வழக்கில் என் மீது விசாரணை நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப் பத்திரிக்கையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.
இதையும் படிங்க : அசோக் நகர் ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு: 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பு!
இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில், மூத்த வழக்கறிஞர் முகைதீன் பாஷா ஆஜராகி, "இந்த வழக்கில் சிபிஐ விசாரணை மிக சரியான முறையில் நடத்தப்பட்டுள்ளது. விடுதியில் மதமாற்றம் செய்வதற்கான முகாந்திரம் இருப்பதாக தெரியவில்லை. ஆனால், விடுதியில் இருந்து போதிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், இந்த மாணவி 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்தார். ஆனால் 11 மற்றும் 12ம் வகுப்பில் மதிப்பெண் குறைந்ததால் மிக மன அழுத்தத்துடன் காணப்பட்டுள்ளார். இதற்கு காரணம் சர்ச் நிர்வாக கணக்குகளை மாணவி எழுத வற்புறுத்தப்பட்டுள்ளது. மேலும், பெண் குழந்தைகள் உள்ள விடுதியில் அதிக விஷத் தன்மை கொண்ட பூச்சி மருந்து வைக்கப்பட்டுள்ளது. மாணவியின் நான்கு மரண வாக்கு மூலங்கள் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை ரத்து செய்யக்கூடாது" என வாதிட்டார்.
விசாரணை முடிந்து இந்த வழக்கு தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி இளங்கோவன், சிபிஐ குற்றப்பத்திரிக்கை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனக்கூறி, மனுதாரர் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.