சென்னை: சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாபர் சாதிக்கை அமலாக்கத்துறை கடந்த மாதம் கைது செய்தது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி ஜாபர் சாதிக்கின் மனைவி அமீனா பானு மற்றும் சகோதரர் முகமது சலீம் ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதையடுத்து, இந்த வழக்கில் அமலாக்கத்துறை தங்களை கைது செய்யக்கூடும் எனக் கூறி, முன் ஜாமீன் கேட்டு இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி தமிழ்ச்செல்வி முன் விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் அமீனா பானு பெயர் இடம்பெறவில்லை எனவும், இருவரும் ஏற்கனவே விசாரணைக்கு ஆஜராகி ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதால் முன் ஜாமீன் வழங்க வேண்டும் என இருவர் தரப்பிலும் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரமேஷ் வாதிட்டார்.
அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ், சட்ட விரோத பணப் பரிமாற்றம் குறித்து இருவரிடம் விசாரிக்க வேண்டியுள்ளதால் முன் ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிட்டார். அமலாக்கத்துறை வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி இருவரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: மாயமான ஐடி ஊழியர் நீதிமன்றத்தில் ஆஜர்.. மதுரையில் நடந்தது என்ன? - IT employee appear in court