சென்னை: தமிழ்நாடு போலீஸ் அதிகாரிகள், பெண் போலீசார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், யூடியூபர் சவுக்கு சங்கர் தேனியில் கைது செய்யப்பட்டார். பின் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது வலது கை உடைக்கப்பட்டுள்ளதாகவும், சிறையில் அவரை சிறைத் துறையினர் துன்புறுத்தியுள்ளதாகத் தெரிவித்து, அந்த விவகாரம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடுவதுடன், உரிய சிகிச்சை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என, சவுக்கு சங்கரின் தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கோவை சட்டப்பணிகள் ஆணையம் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், சவுக்கு சங்கர் மீது காவல்துறை குண்டர் சட்டம் போடுவதைத் தடுக்க, காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என சவுக்கு மீடியா ஊழியர் விக்னேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனியாக வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு, குண்டர் சட்டம் போடப்படாத நிலையில் ,வெறும் யூகத்திலும், அச்சத்திலும் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என தெரிவித்து, அச்சத்தின் காரணமாகத் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: “போலீசாரின் அனுமதியின்றி கஞ்சா வியாபாரம் நடைபெற வாய்ப்பில்லை” - நீதிபதிகள் கருத்து! - Madurai Bench On Ganja Case