சென்னை: சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வணங்கான் என்ற தலைப்பை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி, ஆரஞ்ச் புரொடக்சன்ஸ் உரிமையாளர் எஸ்.சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில், வணங்கான் என்ற தலைப்பை கடந்த 2020ஆம் ஆண்டு தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி சங்கத்தில் பதிவு செய்திருந்ததாக கூறியுள்ளார். மேலும், மத்திய வர்த்தக துறையின் வணிக விதிகளின் கீழ் பதிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். வணங்கான் என்ற தலைப்பை பயன்படுத்தி படத்தை வெளியிட அனுமதித்தால் எனக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் எனவும், இதே பெயரில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனு நீதிபதி P. வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் இயக்குநர் பாலா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வணங்கான் என்ற பெயரில் படம் தயாரிப்பது 2022ஆம் ஆண்டிலேயே தெரியும் நிலையில், இரண்டு ஆண்டுகள் அமைதியாக இருந்துவிட்டு படம் வெளியாகவுள்ள நிலையில் பணம் சம்பாதிக்கும் நோக்கில் கடைசி நேரத்தில் நீதிமன்றத்தை அணுகியுள்ளதாக வாதிட்டார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, படத் தலைப்புக்கு பதிப்புரிமைச் சட்டம் பொருந்தாது என்பதால், வணங்கான் பெயரை பயன்படுத்தவும், படத்தை வெளியிட தடை விதிக்கவும் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: விண்டேஜ் லுக்கில் அஜித் - த்ரிஷா ஜோடி.. விடாமுயற்சி அப்டேட் கொடுத்த படக்குழு! - Vidaa muyarchi 3rd look poster out