சென்னை: கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி முகாம் நடத்தி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐ மாற்றக்கோரி வழக்கறிஞர் சிவிபிரகாசம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா மற்றும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி வாதிட்டனர்.
அப்போது விசாரணை நிலை குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் சிவராமன் மற்றும் அவரது தந்தை மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சிவராமன் மரணம் குறித்து சேலம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அறிக்கை அளித்த பின்னர் விசாரணை நடத்தப்படும் எனவும், சிவராமன் தந்தை மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக கூறி பிரேத பரிசோதனை அறிக்கை அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: போலி என்.சி.சி முகாம் வழக்கு: தமிழக அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ஐகோர்ட்!
மேலும் நான்கு பள்ளிகளிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் அக்டோபர் 15ஆம் தேதி இடைக்கால குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், அது குறித்து நீதிமன்றத்திற்கு எந்த சந்தேகமும் வேண்டாம் எனவும் அரசு சார்பில் கூறப்பட்டது. சிபிஐ விசாரணக்கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்ட பின்னரே முழுமையான விசாரணை நடத்தப்பட்டதாக கூறிய நீதிபதிகள் விசாரணையை அக்டோபர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதனிடையே இந்த வழக்கின் விசாரணையை ரகசிய விசாரணையாக நடத்த வேண்டும் என அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இது குறித்து அடுத்த விசாரணையின் போது பரிசீலிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்