சென்னை: நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில், தேனி தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனுவை நிராகரித்ததை எதிர்த்து, மாவட்ட நூலக கண்காணிப்பாளர் அறிவரசு பாண்டியன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “அரசு ஊழியர் என்ற அடிப்படையில் பணியை ராஜினாமா செய்யாமல் தேர்தலில் போட்டியிட தகுதியில்லை எனக் கூறி, எனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
இந்திய அரசியல் சட்டம் 102(1) வது பிரிவின் கீழ் எனது வேட்புமனுவை நிராகரித்தது சட்டவிரோதம். இப்பிரிவின்படி, மக்களவை உறுப்பினராவதில் இருந்து என்னை தகுதிநீக்கம் செய்ய குடியரசு தலைவருக்கு தான் அதிகாரம் உள்ளது. தேர்தல் அதிகாரிக்கு இந்திய அரசியல் சட்டம் 84வது பிரிவு தான் அதிகாரம் வழங்குகிறது.
அரசு ஊழியர்கள் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்ய அரசியல் சட்டத்திலும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திலும், எந்த தகுதி நீக்கமும் செய்யாததால், எனது வேட்புமனு நிராகரித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். வேட்புமனுவை ஏற்று, வேட்பாளர் பட்டியலில் எனது பெயரைச் சேர்க்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருக்கிறார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் வகிக்கும் நூலக கண்காணிப்பாளர் பணி என்பது அரசு ஊழியர் பணியல்ல எனவும், வேட்புமனுவில் தான் அரசு ஊழியர் என மனுதாரர் குறிப்பிடவில்லை எனவும், அதனால் தகுதி நீக்கம் வராது எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால், ”தேர்தல் ஆணையம் தரப்பில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி இந்த வழக்கை விசாரிக்க முடியாது எனவும், ஏற்கனவே சின்னங்கள் ஒதுக்கப்பட்டு, ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தபால் வாக்குப்பதிவும் துவங்கிவிட்ட நிலையில், வேட்புமனுவை நிராகரித்ததை எதிர்த்து தேர்தல் வழக்கு தான் தாக்கல் செய்ய வேண்டும்” எனவும் விளக்கமளிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையத்தின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தாமதமாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால். பாதிக்கப்பட்டிருந்தால் மனுதாரர் தேர்தல் வழக்கு தாக்கல் செய்யலாம் எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: தருமபுரம் ஆதீனம் விவகாரம்; பாஜக நிர்வாகி அகோரத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி! - Dharmapuram Adheenam Issue