சென்னை: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் காளிராஜுக்கு எதிரான சொத்துக் குவிப்பு புகாரை ஆறு மாதங்களில் விசாரித்து முடிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 2012 - 2013 ஆண்டுகளில் தற்காலிக துணை வேந்தராகவும், 2019 முதல் 2022 வரை துணைவேந்தராகவும் பணியாற்றிய காளிராஜ், வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்துள்ளதாக கூறி மாணிக்கம் என்பவர் லஞ்ச ஒழிப்புத் துறையில் 2024 ஜூலை மாதம் புகார் அளித்திருந்தார்.
இதையும் படிங்க: ஜிஎஸ்டி பக்கமா போயிடாதீங்க... செங்கல்பட்டுக்கு வேற ரூட்ட புடிங்க! தாம்பரம் காவல்துறை எச்சரிக்கை!
இந்தப் புகார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், அதனால் அப்புகாரை விசாரித்து முன்னாள் துணைவேந்தருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மாணிக்கம் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சேஷசாயி முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரரின் புகார் குறித்து ஆரம்ப கட்ட விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விசாரணை முடிந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஆறு மாதங்களில் ஆரம்ப கட்ட விசாரணையை முடிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்