சென்னை: திருவண்ணாமலை மாவட்டம், மாத்தூரில் அரசு புறம்போக்கு நிலம் மற்றும் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள அமைச்சர் எ.வ.வேலுவின் மனைவி ஜீவா தலைவராக உள்ள சரஸ்வதி அம்மாள் கல்வி அறக்கட்டளை பொறியியல் கல்லூரியின் உரிமத்தை ரத்து செய்யக் கோரி, திருவண்ணாமலையைஸ் சேர்ந்த டி.எஸ்.சங்கர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஜெ.சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு புறம்போக்கு மற்றும் நீர்நிலையை ஆக்கிரமித்து கல்லூரி கட்டப்படவில்லை என கல்லூரித் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார். இதை ஏற்றுக் கொண்ட மனுதாரர், 20 ஏக்கர் பரப்பில் கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்ற விதியை மீறி, ஏழு ஏக்கர் நிலத்தில் மட்டுமே கல்லூரி தொடங்கப்பட்டதாக தெரிவித்தார்.
இதனையடுத்து, இந்த விவகாரத்தில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் (AICTE) தான் நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவித்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: பாலியல் தொல்லை வழக்கு: சிறை தண்டனைக்கு எதிராக மாஜி டிஜிபி ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி! - Ex Special DGP Rajesh Dass Case