கோயம்புத்தூர் : கோயம்புத்தூர் மாவட்டம், செங்காட்டு தோட்டம் எனும் பகுதியைச் சேர்ந்த சிவசாமி என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி தனது நண்பர்களுடன் நடைபயிற்சி முடித்துவிட்டு வீட்டின் முன் தேநீர் அருந்திக் கொண்டிருந்தார்.
அப்போது, ஒடிசாவைச் சேர்ந்த பினோஜ்யாக்கா என்பவர் தனது நண்பர்களுடன் சிவசாமியின் தோட்டத்துக்குள் நுழைந்துள்ளார். அவர்களை தோட்டத்திலிருந்து வெளியேற்றிவிட்டு திரும்பிய சிவசாமியின் பின்னந்தலையில், பினோஜ்யாக்கா தென்னை மட்டையால் சரமாரியாக அடித்துள்ளார். இதில், காயமடைந்த சிவசாமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக, சிவசாமியின் நண்பர் அளித்த புகாரின் அடிப்படையில், அன்னூர் காவல் நிலையத்தில் பினோஜ்யாக்காவுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோயம்புத்தூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம், பினோஜ்யாக்காவுக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் தீர்ப்பளித்தது.
இதையும் படிங்க : ஈஷா யோகா மையம் விவகாரம்; மேற்கொண்டு உத்தரவு பிறப்பிக்க முடியாது - ஐகோர்ட்!
இந்த தீர்ப்பை எதிர்த்து பினோஜ்யாக்கா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம் மற்றும் சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சிவசாமிக்கும், பினோஜ்யாக்காவுக்கும் எந்த முன் விரோதம் இல்லை எனவும், திட்டமிட்டு உள்நோக்கத்தோடு கொலை செய்துள்ளார் என நிரூபிக்கப்படவில்லை. மேலும், தென்னை மட்டை பயங்கர ஆயுதமும் இல்லை எனக் கூறி, பினோஜ்யாக்காவுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ஐந்தரை ஆண்டுகள் சிறை தண்டனையாக குறைக்குமாறு வாதிட்டார். இதனை பதிவு செய்த நீதிபதிகள் பினோஜ்யாக்காவுக்கு ஆயுள் தண்டனையை ரத்து செய்தும், தண்டனையை குறைத்தும் உத்தரவிட்டனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்