சென்னை: வரும் ஜூலை 1ஆம் தேதியிலிருந்து மூன்று குற்றவியல் சட்டங்களும் அமலுக்கு வரும் நிலையில் வழக்கறிஞர்கள் அச்சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற ஆவின் நுழைவாயில் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், சென்னை உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன முழக்கமிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன், ''மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது. உடனடியாக அச்சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். திருத்திய சட்டத்தின் பெயர்கள் ஆங்கிலத்தில் இல்லாமல் சமஸ்கிருதத்தில் உள்ளது. அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தற்போது நடைபெறுவது முதற்கட்ட போராட்டம் தான். அந்த மூன்று சட்டத்தை அமல்படுத்துவதை உடனடியாக நிறுத்தாவிட்டால் தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்களை ஒன்றிணைத்து பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றார். மேலும், தேவையென்றால் அகில இந்திய அளவில் வழக்கறிஞர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்துவோம்'' என்றார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய பாஜக ஆட்சியின் கடைசி மக்களவை கூட்டத்தொடரில் 3 குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய ஷாக்சியா, பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா ஆகிய சட்டங்கள் இயற்றப்பட்டன.
கடந்த ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி அரசு கெஜட்டில் இந்த மூன்று சட்டங்களும் சேர்க்கப்பட்டு இந்த மூன்று சட்டங்களும் ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வேட்புமனு; கோரிக்கையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு