சென்னை: தமிழகத்தில் உள்ள பிரதான பேருந்து, ரயில் நிலையங்களில் பெண்களுக்கான காவல் நிலையத்துடன் கூடிய பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்க வேண்டும் எனவும், பணி மற்றும் கல்வி நிமித்தமாக நள்ளிரவு நேரங்களில் பேருந்து, ரயில் நிலையம் வரும் பெண்களுக்கு தங்குவதற்கு பாதுகாப்புடன் கூடிய விடுதிகளை அமைக்க உத்தரவிட வேண்டும் என பெண் வழக்கறிஞர்கள் கனிமொழி மதி, காந்திமதி, ரமாமணி, வாசுகி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கூட்டாக பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது ஷஃபீக் அமர்வில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு ப்ளீடர் எட்வின் பிராபகர் ஆஜராகி, பெண்கள் பாதுகாப்புக்காக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை பட்டியலிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பணம் செலவு செய்து பல திட்டங்களைச் செயல்படுத்தும் அரசை பாராட்டுகிறோம். ஆனால், இது குறித்து அவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பரப்படுத்தப்பட்டதா என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அரசு ப்ளீடர், உரிய வகையில் விளம்பரப்படுத்தப்படும் என தெரிவித்தார்.
இதனையடுத்து, ஏதேனும் குறைகள் இருந்தால் அது குறித்து அதிகாரிகளிடம் முறையிட மனுதாரருக்கு அனுமதியளித்த நீதிபதிகள் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறை நீட்டிப்பு; உயர்நீதிமன்றம் உத்தரவு!